LUCKY PROMOTION
RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You have to Log in to comment.


திரையமைதி வாய்க்கப்பெற்ற மூன்றாம் பிறை திரைப்படம்

Posted in forum 'Cinema News'

avatar

User Support


சில படங்களைப் பார்க்கும்போது இறுதிக் காட்சி முடிவதற்குள்ளாகவே பார்வையாளர்கள் எழுந்து கிளம்பத் தொடங்குவர். இனி அடுத்து எல்லாம் ஒன்றாகச் சேர்வார்கள், யாவும் நலமாக முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். அம்முடிவும் அவ்வாறுதான் இருக்கும். இரண்டரை மணிநேரத்திற்கு அமைதியாக அமர்ந்திருந்தவர்கள் கடைசி இரண்டு மணித்துளிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எழுந்து ஓடுவார்கள். வேறு சில படங்களில் இதற்கு நேர்மாறாகவும் நடக்கும். இறுதிக் காட்சி முடிந்து, படமும் முடிந்து திரையணைந்தால்கூட எழுந்து செல்லும் ஊக்கமில்லாமல் அப்படியே அமர்ந்திருப்பார்கள். படம் அவர்களை அவ்வளவுக்குப் பாதித்திருக்கும். பெரும் சோகம் அவர்களை எழ முடியாதபடி அழுத்திப் பிடிக்கும். துக்க வீட்டிலிருந்து படக்கென்று எழுந்து போக முடியாத இறுக்கம்போன்ற ஒன்று அவர்களைச் சூழ்ந்துவிடும். நானும் அப்படிச் சில படங்களில் எழுந்து போக மனமின்றி உட்கார்ந்திருக்கிறேன். அரங்கமே வெளியேறிய பிறகு கடைசியாளாய் எழுந்து போயிருக்கிறேன். அப்படி என்னைத் துயரில் மூழ்கடித்த படங்களின் ஒன்று 'மூன்றாம் பிறை.'

நாம் நூற்றுக்கணக்கான படங்களைப் பார்த்திருந்தாலும் சில படங்களால்தான் வாழ்க்கையின் இன்னொரு புறத்தை விளங்கிக்கொள்கிறோம். காதல் எவ்வளவுக்கெவ்வளவு இன்பத்துக்குக் காரணமாகின்றதோ அதே எதிர்நிலையில் கொடுந்துன்பத்திற்கும் காரணமாகின்றது. இது காதல்தான் என்ற விழிப்பு நிலைகூட வேண்டா. உடனிருந்து பார்த்துக்கொண்டே இருந்தால்கூடப் போதும். அதற்குக்கூட வழியில்லாமல் காலம் பிரித்துவிடும். காலப்போக்குகள் எத்தகைய மாற்றங்களை முன்வைத்தாலும் காதலைத் துறந்துவிட்டு வாழும் வித்தை நமக்குத் தெரியாது. மூன்றாம் பிறையில் பாலு மகேந்திரா முன்வைத்த ஆண் பெண் உறவு, காதல் என்ற வளையத்துக்குள்ளேயே வராது. அன்பின் வழியே ஓர் உறவு நிலை இயல்பாகக் கனிந்து தொடர்ந்து செல்லும். அதைக் காதல் என்ற வழக்கமான சட்டகத்துக்குள் அடக்குவது தவறுதான்.

விஜிக்கும் சீனுக்கும் உள்ள இயல்பை மீறிய பாசப்பிணைப்பு மேலும் என்னாகிறது என்ற புள்ளியில் பிரிவே இறுதித் தீர்ப்பாகிறது. ஏனென்றால் சீனுக்கு விஜியின்மீது இருந்தது காதலே என்றாலும் விஜிக்குச் சீனு மீது இருந்தது முதிராச் சிறுமியின் மனத்தில் பெருகும் பேரன்புதான். "வானெங்கும் தங்க விண்மீன்கள் விழியிமை மூட சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்..." என்ற பாடலோடு தொடங்கும் படம். தமிழ்த்திரையுலகில் எழுதப்பட்ட பாடல்களில் இதுதான் மிக நீளமான முதல்வரி என்று வைரமுத்து கூறுவார். அப்பாடல் முடிவில் கொடிய விபத்து. அதில் தன்னினைவு பிசகிய ஸ்ரீதேவிக்குச் சிறுமியின் நினைவும் மனமுதிர்ச்சியுமே மீதமிருக்கும். அவளை ஒரு பொருட்பெண்டிர் கூடத்தில் பார்க்கும் சீனு தன்னோடு உதகைக்கு அழைத்து வந்துவிடுகிறான். தன்னியல்புக்கு மாறான ஓரிடத்திற்குச் சீனு சென்றிருந்தாலும் அங்கே கண்டவளிடம் அவனால் அன்பினனாகத்தான் இருக்க முடிந்தது.

உடற்சேர்க்கையை அவன் மனம் விரும்பவில்லை. அவன் அன்புடையவனாகத்தான் இருக்க முடியுமேயன்றி, காமஞ்சான்ற பெருமகனாக நடந்துகொள்பவன் அல்லன். இயக்குநர் அந்த நியாயத்தைத் தொடக்கக் காட்சிகளிலேயே கற்பித்துவிடுவதால் பார்வையாளர்கள் சீனுக்காக மனஞ்சாய்ந்துவிடுகிறார்கள். பாலுமகேந்திராவின் தனிவாழ்வு கொந்தளிப்பாக இருந்தபோது அவர் மூன்றாம் பிறையைப் படைத்தளித்தார். "வாழ்வில் எனக்குக் கிடைத்தற்கரிய புதையல் ஒன்று கிடைத்தது. காலம் அதை இடைமறித்துப் பறித்துக்கொண்டது. அந்த இழப்பை என்னால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும் ? அந்தத் துக்கத்தை வெளிப்படுத்த எனக்குத் தெரிந்த ஒரேமொழி என்னுடைய திரைமொழிதான். மூன்றாம் பிறையில் நான் செய்தது அதைத்தான்," என்று கூறினார். உதகையைப் பற்றி எத்தகைய திரைப்படங்கள் வந்தாலும் மூன்றாம் பிறை உருவாக்கிய துயரத்தை அவற்றால் கடக்க முடியவில்லை. பெருந்துக்கத்தைத் திரையில் தீட்டுவதற்குரிய மலைநிலமாக வெவ்வேறு இயக்குநர்கள் உதகையைப் பயன்படுத்திக்கொண்டனர்.

பிற்பாடு வந்த 'இதயத்தைத் திருடாதே'விலும் அதேதான் நிகழ்ந்தது. இராபர்ட்-இராஜசேகரன் எடுத்து 'மனசுக்குள் மத்தாப்பு' திரைப்படத்திலும் அவ்வாசனையை முகரலாம். தனிப்பட்ட முறையில் பாலுமகேந்திராவின் விருப்பத்திற்குரிய வெளிப்புறப் படப்பிடிப்புத் தளமும் உதகைதான். படங்களில் பார்த்த உதகையின் பசுமை நேரில் செல்கையில் இல்லாமற் போவதும் உண்டு. பல்வேறு வண்ண அழுத்தங்களைக் கொடுத்து உதகையின் இயற்கையழகை மீறிய காட்சிகளாக அவற்றைக் காட்டுகிறார்கள். பாலுமகேந்திரவின் ஒளிப்பதிவில் இயற்கையழகு மட்டுமே படம்பிடிக்கப்பட்டிருக்கும். சூரியனுக்கும் ஒளிப்பதிவாளர்க்குமான நேரடி வினை அது.

செய்யுளில் யாப்பமைதி என்று சொல்வார்கள். யாப்பின் வழியே அமைய வேண்டியவை அனைத்தும் ஆங்காங்கே சிறப்பாக வந்தமைந்துவிடுவதுதான் யாப்பமைதி. அத்தகைய செய்யுள்கள் தம் கட்டமைப்பில் இலக்கணச் செம்மையோடும் கருத்தழகில் செறிவோடும் இருப்பவை. திரைப்படத்திற்கும் அதே இலக்கணத்தைப் பொருத்திப் பார்க்கலாம். அதனைத் 'திரையமைதி' என்ற சொற்றொடரால் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு திரைப்படத்திற்கான இலக்கணங்கள் அனைத்தும் ஒருங்கே கூடியமைவதுதான் திரையமைதி. அந்தத் தன்மையினால் தன் பார்வையாளனை உணர்ச்சிகளின் ஆழத்திற்குள் அழைத்துச் சென்று அவனுக்கே நிகழ்ந்ததைப்போன்ற பட்டறிவை ஊட்டுவது. மூன்றாம் பிறை அத்தகைய திரையமைதி வாய்க்கப்பெற்ற திரைப்படம். அந்தத் திரையமைதியைக் கண்டடைந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சிலரே. அவர்கள்தாம் முன்னணி இயக்குநர்களாக வெற்றிவலம் வந்தார்கள். மூன்றாம் பிறையைப் போன்ற இன்னொரு படத்தையோ, அல்லது அதற்கு நிகரான மற்றொரு படத்தையோ பாலுமகேந்திராவினால்கூட பிற்காலத்தில் ஆக்க முடியவில்லை. அதுதான் மூன்றாம் பிறையின் சிறப்பு. மூன்றாம் பிறை போன்ற படங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டிருக்க வேண்டும். தொலைக்காட்சிகளில் அப்படம் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படம் வெளியான காலத்திற்குப் பிறகு இரண்டாம் மூன்றாம் நிலை நகரங்களில்கூட மறு வெளியீடு செய்யப்படவில்லை.

எண்பதுகளின் இறுதியில் ஒரேயொருமுறை புதிய படியெடுப்பு செய்து வெளியிட்டார்கள் என்று நினைக்கிறேன். அந்த வாய்ப்பில்தான் அத்திரைப்படத்தை வெள்ளித் திரையில் புதுமெருகு குன்றாத படத் தரத்தில் பார்த்தேன். அதற்குப் பிறகு அப்படத்தை அரங்குகளில் காண முடியவில்லை. சிறந்த திரைப்படம், சிறந்த இசை, சிறந்த நடிகர்கள் என்று எல்லாம் அமைந்தும் மூன்றாம் பிறையைப் போன்ற படங்கள் இன்றைய பார்வையாளர்களைச் சென்றடையாதபடி இருட்டடிப்பு செய்யப்படுகின்றன என்பதும் உண்மை.

- கவிஞர் மகுடேசுவரன்.
on 16/12/2017, 7:45 pmPost 1
You cannot reply to topics in this forum