ஆப்ரேஷன் தமிழ்நாடு.. அமித்ஷா வகுக்கும் பலே திட்டம்

avatar

சென்னை: தமிழகத்தில் தாமரை மலரும், மலர்ந்தே தீரும், விரைவில் மலரும், கண்டிப்பாக மலர்ந்து விடும் என மேடைக்கு மேடை பேசி வந்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையின் சமீபத்திய பேச்சுக்களில் கூட இந்த வார்த்தைகளை நாம் காண முடிவதில்லை. தமிழகத்தில் தாமரை மலர்வது இருக்கட்டும், தாமரையின் விதைகளைக்கூட நாம் தூவ முடியாது என்ற அவநம்பிக்கை கூட அவர்களுக்கு ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்கு பிறகு வந்திருக்கலாம். இதன்வெளிப்பாடு தான் மறைமுகமாக அவர் தமிழக மக்களை நிர்பந்திக்க ஆரம்பித்துள்ளனர். பாஜகவுக்கு வாக்களித்தால் கண்டிப்பாக தமிழகம் முன்னேற்றம் பெறும் என்ற வார்த்தை பாஜகவினர் அடிக்கடி பயன்படுத்தி வருகின்றனர்.

பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்ததிலிருந்து தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இழப்பீடு, நிதி ஒதுக்கீடு, காவிரி விவகாரம் என அனைத்திலும் தமிழகத்திற்கு பாஜக மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துக்கொண்டு தான் வருகிறது. இப்படி நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழகம் மிரட்டப்பட்டாலும், அதைப்பற்றி கவலைப்படாத தமிழர்கள் ஆர்.கே.நகர் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்கை அளித்து பாஜகவை புறந்தள்ளினர். இதுதான் பாஜகவின் ஆப்ரேஷன் தமிழ்நாடுக்கு முக்கிய காரணம்.

பாஜகவின் அடிப்படை சித்தாந்ததிற்கும், தமிழர்களின் அடிப்படை சித்தாந்தத்திற்கும் பெரும் வித்தியாசம் இருப்பதே பாஜக தமிழகத்தில் கால் பதிக்க முடியாமல் போவதற்கு காரணம். மதத்தை வைத்து வடமாநிலத்தவர்களை பிரித்தாளும் போக்கு தமிழகத்திற்கு என்றுமே எடுபடாது. வடமாநிலத்தவர்களின் மனநிலையும், தமிழர்களின் மனநிலையும் கலாச்சாரம் சார்ந்து மட்டுமல்லாமல், மரபு சார்ந்து வித்தியாசமானது என்பது தான் அதற்கு காரணம்.

வெறுப்பு அரசியல் என்பது பாஜகவின் பிரதான ஆயுதமாகவே கருதப்படுகிறது. இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் உள்ளிட்ட வெறுப்பு அரசியலை பயன்படுத்தியும், இல்லாததை இருப்பது போல பயமுறுத்தியும் வடமாநிலத்தில் காண முடிந்த வெற்றி தமிழகத்தில் பாஜகவினருக்கு எப்போதுமே கிட்டப்போவதில்லை. தமிழக இஸ்லாமியர்களிடம் சக இந்துக்கள் வெறுப்பை உமிழாமல் சகோதரத்துவத்துடன் பழகுவதே, பிரித்தாளும் சூழ்ச்சி இங்கு தோல்வியடைந்ததற்கு முதல் காரணம்.

எண்ணற்ற ஜாதியால் பிரிந்து, அடித்துக்கொண்டும் குத்திக்கொண்டும் இருந்தாலும், எப்போதுமே தமிழர்கள் மதத்தால் பிரிவது கிடையாது. காரணம் தமிழகத்தில் ஒரு சின்ன பகுதியாக இருந்தாலும் அதில் கோயில், தேவாலயம், மசூதி ஆகியவை இருக்கும். இந்த ஆரம்பகால கட்டமைப்பே தற்போதும் பழகி விட்டதால் மத அரசியலை விட சகோதரத்துவத்தையே தமிழர்கள் பெரிதும் விரும்புவது, பாஜக சித்தாந்தத்திற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களிலும் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் பாஜகவிற்கு ஒரு எம்.எல்.ஏ. சீட்டு கூட கிடைக்காதது அக்கட்சியின் தலைமைக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. கேரளாவும் கர்நாடகமும் கூட பாஜகவுக்கு எதிராக இருந்தாலும், தமிழகத்தில் இருக்கும் எதிர்ப்பலையை விட அங்கு குறைவு என்பது தான் நிதர்சன உண்மை.

மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் இஸ்லாமியர்கள் இருக்கும் உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கியவர் பாஜக தலைவர் அமித்ஷா. பாஜகவில் ஆரம்பத்திலிருந்து திட்டமிட்டு கட்டம்போட்டு காய் நகர்த்தில் ஜகஜாலகில்லாடியாக கருதப்படுபவர் அமித்ஷா ஆவார். ஆனால் அவரின் எண்ணற்ற பிளானுமே தமிழகத்தில் செல்ஃப் எடுக்காமல் போனது அவரையே சற்று கவலையில் தான் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல அமித்ஷா வியூகங்களை வகுத்துக்கொண்டே தான் வருகிறார். தமிழகத்தில் கடந்த ஒரு வருடமாக நடைபெறும் அரசியல் மாற்றங்களில் அமித்ஷாவின் பங்கு இருப்பது யாராலும் மறுக்க முடியாது.

நீயும் வளரு, நானும் வளர்கிறேன் என்ற நியதியின்படி ஆட்சியாளர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் எப்போதும் நல்ல உறவுமுறையில் இருப்பது வழக்கம். அடுத்து எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதில் தொழிலதிபர்களின் பங்கும் பிரதானம். வடமாநிலங்களில் பெரும்பாலான தொழிலதிபர்கள் இந்துகளாக இருப்பதால், பாஜகவுக்கு அங்கு ஆட்சியை பிடிப்பதில் பெரிய சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. இவ்வாறு தமிழகத்தில் ஆட்சியாளர்களுக்கு உதவும் தொழிலதிபர்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்று பாஜக தோல்வியடைந்தது. காரணம் தமிழக தொழிலதிபர்கள் மதத்தை புறந்தள்ளி விட்டு ஜாதி அடிப்படையில் இணைந்திருந்ததால் இதிலும் பாஜக தோல்வியை கண்டது.

பல கோடி பாஜக தொண்டர்கள் நாடு முழுவதும் இருந்தாலும், பாஜகவின் முகமாக உலகம் முழுவதும் அறியப்படுவது மோடியின் முகம் தான். ஆனால் அந்த முகம் தமிழகத்தில் எடுபடவில்லை என்பதே நிதர்சனம். அதிரடி அரசியல் ரசிகர்களான தமிழக மக்கள், பேச்சை விட செயல்பாட்டை பெரிதும் விரும்புவதால், பேச்சை மட்டுமே பிரதானமாக கொண்ட தமிழிசை, ஹெச்.ராஜா உள்ளிட்டோரின் முகங்கள் இங்கு எடுபடவில்லை.

தமிழக பாஜகவுக்கு என்று ஒரு முகம் தேவை, அந்த முகம் தான் வாக்குகளை தீர்மானிக்கும் என்ற உண்மையை காலம் கடந்து உணர்ந்த அமித்ஷா, அதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். ரஜினி ரெடி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆப்ரேஷன் தமிழ்நாடு மூலமாக, சின்ன பிரச்சனை கோடுகளுக்கு பக்கத்தில் பெரிய பிரச்சனை கோடுகள் போடப்பட்டது. இயற்கையும் இதற்கு ஒத்துழைத்ததுப்போல, ஜெயலலிதா மரணம், கருணாநிதியின் உடல்நலக்குறைவு பாஜகவின் திட்டத்திற்கு வழிவகுக்கிறது. அதன்பின் செயற்கையாக சில மாற்றங்களும் நிகழ்ந்தன. நிகழ்த்தப்பட்டன. அதிமுக பிளவு, சசிகலா கைது, தினகரன் வெளியேற்றம், ஏவப்பட்ட ஐடி ரெய்டுகள், டம்மியாக்கப்பட்ட திமுக, 2ஜி விடுதலை, கண்டுக்கொள்ளப்படாத பணப்பட்டுவாடா, தினகரன் வெற்றி, மீண்டும் உடையும் நிலையில் அதிமுக என தற்போது யார் விளையாடுவதற்கு ஏதுவாக தமிழக அரசியல் மைதானத்தை பாஜக காலியாக வைத்துள்ளது என்பது 31ம் தேதி தெரியும்.

நீதிக்கட்சியிடமிருந்து காங்கிரஸ், காங்கிரஸிடமிருந்து திமுக, திமுகவிடமிருந்து அதிமுக, அதன் பின் இருகட்சிகளுமே மியூச்சுவல் உடன்பாட்டில் மாறி மாறி ஆட்சியை பிடித்தாலும் இதில் எப்போதுமே மத அரசியலும், ஜாதி வெறுப்பும், முன்நின்றதே இல்லை. அதனால் தான் இதுவரை எந்த மதம் சார்ந்த கட்சியோ, ஜாதி சார்ந்த கட்சியோ தமிழகத்தின் ஆட்சி கட்டிலில் ஏறியது இல்லை. ஓட்டு போடும் மனிதர்கள் வேண்டுமானாலும் மாறிக்கொண்ட போகலாம் ஆனால் இனம் ஒன்று தான். பாஜகவின் தொடர் வியூகங்கள், களப்பணிகள், குட்டையை குழப்புவது என ஆப்ரேஷன் தமிழ்நாட்டில் உத்வேகத்துடன் காய்கள் நகர்த்தப்பட்டாலும், ஓட்டு போடப்போவது என்னமோ தமிழக மக்களின் கை தான்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!