இப்போ இன்னொருத்தருக்கு காலம்.. என்ன சொல்ல வருகிரார் ரஜினி!

avatar
சென்னை: இப்போது இன்னொருத்தருக்கு காலம் என்று ரசிகர்களுடனான இன்றைய நான்காம் நாள் சந்திப்பின்போது நடிகர் ரஜினிகாந்த் கூறியது பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று 4வது நாளாக ரசிகர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை இன்று அவர் சந்தித்தார். இந்த கூட்டத்தில் ரஜினிகாந்த் பேசியதாவது:

எனக்கு கோவையை பற்றி நினைக்கும்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அண்ணாமலை திரைப்படம் ரிலீசான நேரத்தில் நானும், சிவாஜி சாரும் கோவை விமான நிலையத்திற்கு ஒரு விஷயமாக சென்றிருந்தோம். நானும் அவரும், ஒன்றாக நடந்து சென்று கொண்டு இருந்தோம். அண்ணாமலை படம் சூப்பர் டூப்பர் ஹிட். தமிழகம் முழுக்க கொடி பறந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடிவிட்டனர்.

உங்களை பற்றிதான் (ரசிகர்கள்) தெரியுமே. ரஜினி வாழ்க என கோஷம் போட ஆரம்பித்தனர். அத்தனை ரசிகர்களை ஒன்றாக பார்த்தபோது, எனது உடம்பு மீது பாம்பு ஏறியதை போல பதற்றமாகிவிட்டேன். நடையின் வேகத்தை குறைத்தேன். அப்போது சிவாஜி சார் என்னை பார்த்து, "எங்க நெளியிற, முன்னாடி வா.." என கையை பிடித்து இழுத்தார்.

"இது உன் காலம். நாங்கெல்லாம் நடிச்சி பெயர் வாங்கியாச்சி. இப்போ உன் காலம். அங்க பார்த்து கையை அசை, இந்த பக்கம் பார்த்து கையை காண்பி" என்று எனக்கு சொல்லிகொடுத்தார் சிவாஜி. சமீபத்தில் ஒருமுறை கோவையில் சாமியாரை பார்க்க சென்றேன். அப்போது இன்னொரு நடிகர் அங்கே போயிருந்தார். அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை. அந்த நடிகரை பார்க்க கூட்டம் கூடிவிட்டதால் இப்போது நீங்கள் வர வேண்டாம் என்று எனக்கு சாமியார் சார்பில் தகவல் கொடுக்கப்பட்டது.

அப்போது எனக்கு சிவாஜி சாசர் சொன்னது நினைவுக்கு வந்தது. இப்போது இன்னொருத்தருக்கு காலம். காலம் மாறிக்கொண்டே இருக்கும். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். அண்ணாமலை திரைப்படம் 1992ல் திரைக்கு வந்தது. அதன்பிறகு 1996 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என ரஜினிகாந்த் 'வாய்ஸ்' கொடுத்தார். அப்போதே ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஒத்திப்போட்டார். இப்போது அரசியலுக்கு வருவீர்களா என ரசிகர்கள் அதிகமாக கேட்டு துளைத்தெடுப்பதால் 31ம் தேதி தனது முடிவை சொல்வதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், இப்போது இன்னொருத்தருக்கு காலம் என ரஜினி கூறியுள்ளார். இதே பேச்சின்போது, அரசியலுக்கு காலம் முக்கியம் என்றும் கூறியுள்ளார். அப்படியானால், தனது அரசியல் காலம் முடிந்துவிட்டது. இப்போது வேறு நடிகரின் ஆதிக்கம் ஆரம்பித்துவிட்டது என்பதை ரஜினி கூறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது நிச்சயம் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்க்காத வார்த்தைகள்தான். ஆனால், ரஜினியின் ஸ்டைலே சர்ப்ரைஸ்தான். எனவே ஞாயிற்றுக்கிழமை வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!