ரஜினியின் ஆன்மீக அரசியல் வகுப்புவாத அரசியல்தான்... ரவிக்குமார் சாடல்!

avatar
சென்னை: ரஜினியின் அரசியலை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள், இவருடைய அரசியல் வழிபாட்டு அரசியல் மட்டுமல்ல வகுப்புவாத அரசியல், கடுமையாக எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டிய அரசியல் என்றும் ரவிக்குமார் காட்டமாக பேசியுள்ளார். ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் இன்றும் காட்டமாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அவர் ரஜினி குறித்து கூறியதாவது:

ரஜினியின் அரசியல் அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்று தான். சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று சொல்லி இருப்பது ரஜினியின் நோக்கம் என்ன என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ரஜினியின் நோக்கம் என்ன என்பதை விட அவருக்கு பின்னால் இருப்பவர்களின் நோக்கம் என்ன என்பதும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. உன் நண்பன் யார் உன்னைப் பற்றி சொல்கிறேன் என்று சொல்வார்கள், ரஜினியைப் பொறுத்தவரையில் உன் குரு யார் உன்னை சொல்கிறேன் என்று நாம் சொல்லலாம்.

அவர் ரசிகர்களை சந்திக்கும் நேரத்தில் தன்னுடைய குருநாதர்களாக சிலரை குறிப்பிட்டு சொல்லிக் கொண்டிருந்தார். அதில் சுவாமி சச்சிதானந்தாவை பற்றி சொன்னார். சுவாமி சச்சிதானந்தா தமிழகத்தில் மக்களுக்காக பணியாற்றியவர் அல்ல அமெரிக்காவில் 750 ஏக்கரில் ஆசிரமம் உருவாக்கிய யோகா குரு அவர். இவரை குருவாக ஏற்றுக் கொண்டிருக்கும் ஒருவர் என்ன செய்வார் என்பதை தெளிவாக சொல்லி விட முடியும். அவர் அதை செய்வார், இதை செய்வார் என்று பார்ப்பதை விட இவரது அரசியல் என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்று பார்ப்பது மிகவும் முக்கியமானது. இந்தியாவில் ஏற்றுக் கொண்டிருப்பது ஜனநாயக அரசியல், இந்த ஜனநாயக அரசியல் தனி மனிதனை குடிமகனாக்குகிறது.

ஆனால் நடிகர்கள் தங்களை வழிபடுகிற ரசிகர்களை வைத்து படங்களை வெற்றி பெறச் செய்கிறவர்கள். நடிகர்களின் வரவால் குடிமக்கள் ஜனநாயகத்தில் ரசிகர்களாக மாற்றப்படுகின்றனர். இன்று கூட ரசிகர் மன்றத்தை கட்டமைக்கப் போகிறேன், அதை வைத்து கட்சியை கட்டமைக்கப் போவதாக சொல்கிறார். அப்படியானால் அவருடைய நோக்கம், ஜனநாயகத்தால் குடிமக்களாக்கப்பட்டவர்களை ரசிகர்களாக மாற்றுகிறார். எந்த வித விமர்சன பண்பும் அற்று ஒரு பிம்பத்தின் முன்பு கைகூப்பி நிற்பவர்கள் ரசிகர்கள். ரசிகர் மன்ற அரசியல் என்பது மிக மிக ஆபத்தானது.

அம்பேத்கர் அரசியலில் வழிபாடு என்பது மிகவும் ஆபத்தானது என்றார். இன்று மதம் மட்டுமல்ல சினிமாவும் ஊக்குவிக்க முடியும் அதை பரப்ப முடியும் என்ற நிலை வந்துள்ளது. மதத்தின் இடத்தை தமிழகத்தில் சினிமா எடுத்துக் கொண்டுள்ளது. கோயில் இருந்த இடங்களை தியேட்டர்கள் எடுத்துக் கொண்டன, கடவுள்கள் இருந்த இடத்தில் சினிமா நடிகர்கள் பிம்பத்தை புகுத்துகிறார்கள், இதன் பிரதிபலிப்பாகத் தான் ரஜினியின் அரசியலை பார்க்க வேண்டியுள்ளது. அவர் தன்னுடைய மேடையை அமைத்திருந்த செட், பின்புறம் இருந்த ஆன்மீக முத்திரை அனைத்துமே சினிமாவில் பிளாப் ஆன விஷயங்கள்.

அதை இங்கே அரசியலில் ரஜினி கொண்டு வருகிறார் என்றால், இங்கே ஒரு வகுப்புவாத அரசியல் களம் உருவாக்கப்படுகிறது. திராவிட அரசியல் மீது எத்தனையோ விமர்சனம் இருந்தாலும்,இந்தியாவில் இருந்து தமிழகத்தை தனித்து காட்டிக் கொண்டிருப்பது அது தான். அந்த கருத்தியலை உடைத்தால் தான் வகுப்புவாதத்தை வேர்கொள்ளச் செய்ய முடியும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

@WriterRavikumar
பகவத் கீதையை புனித நூலாக அறிவிக்க முயன்ற கட்சி பாஜக. கீதையின் வசனத்தைக் கூறி ரஜினி ஆரம்பித்திருக்கிறார்
9:23 AM - Dec 31, 2017
Ravikumar

ஆர்கே நகர் தேர்தல் தோல்விக்குப் பிறகு ரஜினியின் அரசியல் வருகை அவர்களுக்கு மிகவும் தேவையாக இருக்கிறது. அவர் பண்படுத்தப்போகிற களம் என்பது வகுப்புவாத களம் தான், வகுப்புவாதம் என்பதற்கும் ஆன்மீகம் என்பதற்கும் வேறுபாடுகள் இல்லை. பாஜக மதவாத அரசியல் என்று சொல்லவில்லை, ஆன்மீக அரசியல் என்று தான் சொல்கிறது. பகவத் கீதையை புனித நூலக அறிவிக்க முயற்சி செய்த அரசு தான் பாஜக. ரஜினி இன்று பகவத் கீதையின் ஸ்லோகத்தை சொல்லி அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

இது மிகவும் வெளிப்படையாக இருக்கிறது, அவருடைய ஆன்மீகம் என்பது இந்து மத ஆன்மீகம் மட்டும் தான் அதில் கிறிஸ்தவருக்கோ, இஸ்லாமியருக்கோ இடமில்லை. சுவாமி சச்சிதானந்தா ஆசிரமத்தில் கூட அனைத்து மத குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ரஜினி பேச்சு, குறியீடுகள் என அனைத்திலும் இந்து மதம் அல்லாத பிற மதத்தினரை பயன்படுத்தவில்லை.

@WriterRavikumar
தமிழக அரசியல் களத்தைக் கூறுபடுத்தி வகுப்புவாதத்துக்கு அதைத் தயார்படுத்துவதே ரஜினிக்கு தரப்பட்டுள்ள அசைன்மெண்ட்
9:31 AM - Dec 31, 2017
Ravikumar

எனவே ரஜினியின் ஆன்மீகத்தின் உட்கூறு இந்து அரசியல் தான். ஆனால் அதை வெளிப்படையாக சொல்லி அரசியல் செய்ய முடியாது என்பதால் ஊழல் எதிர்ப்பு, ஆன்மீகம் என்று சொல்கிறார். ரஜினியின் அரசியலை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள், இவருடைய அரசியல் வழிபாட்டு அரசியல் மட்டுமல்ல வகுப்புவாத அரசியல், கடுமையாக எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டிய அரசியல் என்றும் ரவிக்குமார் காட்டமாக பேசியுள்ளார்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!