தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் வந்தால்... ஐநாவில் இந்தியை புகுத்துவதற்கு சசிதரூரின் கேள்வி இது?

avatar
டெல்லி: பிரதமர் மோடி இந்தி பேசுகிறார் என்பதற்காக ஐநாவின் ஒரு மொழியாக இந்தியை கொண்டு வர அரசு முயற்சித்து வருவதாக காங்கிரஸ் எம்பி சசிதரூர் குற்றம்சாட்டியுள்ளார். இதே தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வந்தால் அவரை இந்தி பேச நாம் வற்புறுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் இன்று கேள்வி நேரத்தின் போது வெளியுறவுத் துடிற அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த போது, ஐநாவில் இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக சேர்க்க ஆகும் செலவை மற்ற உறுப்பு நாடுகளும் பங்கெடுத்துக் கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு பாஜக எம்.பி ஒருவர் இந்தியை ஐநாவின் அதிகாரப்பூர்வ மொழியாக சேர்க்க ரூ. 40 கோடி வரை செலவாகுமே என்றார். அதற்கு சுஷ்மா ஸ்வராஜ் அரசு எதற்கும் தயாராக இருக்கிறது, தேவைப்பட்டால் ரூ. 400 கோடி கூட செலவு செய்வோம், ஆனால் விதிகள் அதற்கு இடம் கொடுக்காது என்றார். இதனையடுத்து ஐநாவில் இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக சேர்க்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் எம்.பி சசிதரூர் கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். இந்தியை சேர்ப்பதற்கு இப்போது என்ன அவசியம் வந்துவிட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும் இந்தி பேசுகிறார்கள் என்பதால் அதனை மொழிபெயர்த்து கேட்பதை மக்கள் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் இந்தி பேசாத மாநிலங்களை எப்படி இந்த கருத்தை வைத்து சமாதானம் செய்ய முடியும். நாளையே தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமரோ அல்லது மேற்குவங்கத்தில் இருந்து ஒரு பிரதமரோ வந்தார், அவர்களை நீங்கள் இந்தி தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்றார்.

இதற்கு பதிலளித்த சுஷ்மா ஸ்வராஜ், இந்தி ஃபிஜியிலும் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்கிறது. மொரிஷியஸ், ட்ரினிடாட், உள்ளிட்ட நாடுகளிலும் பரவலாக பேசப்படுகிறது. எனினும் இந்தியை ஐநாவில் சேர்க்கும் பணி முதற்கட்ட அளவில் தான் இருக்கிறது, இதற்கு 3ல் இரண்டு பங்கு உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவைப்படுகிறது என்றார். இந்தியா இதற்கான செலவை ஏற்கத் தயாராக இருக்கிறது. எனினும் சிறிய நாடான மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளும் செலவை ஏற்றுக் கொள்ள அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!