சட்டம் படித்த வழக்கறிஞர் சட்டத்தின் பிடியிலேயே சிக்கினார்.. - லாலுவின் கதை

avatar
பீகார்: மாட்டுத்தீவன வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி 5லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
1948ம் ஆண்டு கோபால்கன்ஞ் மாவட்டத்தில் உள்ள புல்வரியாவில் லாலு பிரசாத் யாதவ் பிறந்தார். ஏழை பெற்றோருக்கு இரண்டாவது மகனாக பிறந்த அவர் ஆரம்பம் முதலே படிப்பில் ஆர்வத்துடன் இருந்தார். பாட்னாவில் சட்டமும், சமூக அரசியலையும் பாடமாக படித்த அவர், அதில் தேர்ச்சியும் பெற்றார். இதனைத்தொடர்ந்து பீகார் கால்நடை மருத்துவமனை கல்லூரியில் கணக்காளராக அவர் தன் வாழ்க்கையை தொடங்கினார்.

1973ம் ஆண்டு ராப்ரி தேவியை திருமணம் செய்துக்கொண்ட லாலு பிரசாத் தன்னுடைய அரசியல் வாழ்க்கையிலும் கால் பதிக்க ஆரம்பித்தார். திருமண வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையும் கையாண்ட லாலுவுக்கு 7 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அதேபோல அவர் அரசியலிலும் 29 வயதிலேயே எம்.பி.யாக உயர்ந்தார். அந்தகாலக்கட்டத்தில் மிக சிறிய வயதில் எம்பி ஆனவர் லாலு என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.யாக இருந்தாலும் சரி முதல்வராக இருந்தாலும் சரி, எந்த பதவி கிடைத்தாலும் இரட்டை குதிரையில் அவர் மிகவும் சர்வ சாதாரணமாக பயணம் செய்தார். பீகாரின் பல வளர்ச்சித்திட்டங்களை கொண்டு வந்த லாலு, ரயில்வே அமைச்சராக பல புரட்சிக்கர திட்டங்களை கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில் பீகாரின் அரசன் போலவே மாறினார் லாலு. அரசன் என்றால் கண்டிப்பாக அதிகார மீறல்கள் இருக்கும் இல்லையா, அதன் விளைவு தான் மாட்டுத்தீவன ஊழல் வழக்கு.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிக்கிய லாலுவுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் திரண்டு வந்து நின்றனர். மரியாதையும், அதிகாரத்துடன் வாழ்ந்து வந்த லாலுவின் வாழ்க்கையில் இடி விழ ஆரம்பித்தது அப்போது தான். முதல்வர் பதவி பறிப்போனது. விடுவாரா லாலு, ஒன்றுமே தெரியாத தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார். பெயருக்கு தான் ராப்ரி முதல்வர், பவர் அப்போதும் லாலுவிடம் தான் இருந்தது.

மாட்டுத்தீவன ஊழல் சர்ச்சையில் சிக்கியதால் லாலு மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்தது. கட்சிக்குள் போதிய ஆதரவு இல்லாததால் ஜனதா தளத்தை உடைத்து ராஷ்டிரிய ஜனதா தளத்தை உருவாக்கினார் லாலு. மக்களும் தொண்டர்களும் அவரின் பின்னாலே வந்து கட்சியில் இணைந்தனர். தொடர்ந்து ஆட்சி அதிகாரமும் அவரிடம் வந்தது.

இந்திய அளவில் பல தலைவர்கள் இருந்தாலும் லாலு அளவிற்கு நகைச்சுவையாக யாராவது இருப்பார்களா என்று தெரியவில்லை. அவரின் நடை உடை பாவனை, பேசும் முறை, நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும் முறை என அனைத்திலும் அவர் நகைச்சுவை கலந்து பேசும் வல்லமைக் கொண்டவர். அவரின் தோற்றத்திற்கும் அந்த நகைச்சுவை ஒத்துப்போனதால் அதனால் அவர் பாகிஸ்தான் வரை கூட சென்று அங்குள்ள அரசியல்வாதிகள் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தி விட்டு வந்தார்.

மாட்டுத்தீவன வழக்கு சுமார் 21 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு. முதல்வர் பதவியையும், நிதித்துறையை கையில் வைத்திருந்த லாலு ஊழல் வழக்கை தனது இஷ்டத்திற்கு இழுத்தடித்தார். வழக்கு ஜார்க்கண்டுக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் முழுவீச்சி விசாரணையை தொடங்கினார்கள்.

வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் முறையான ஆதாரங்களும், ஆவணங்களும் இல்லை என்றும், பலமுறை வாதம் புரியவில்லை என்று ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கூறப்பட்டதை போல லாலுவும் விசாரணையை தட்டிக்கழித்து வந்தார். வேறு மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், லாலுவுக்கு சிறை தண்டனை கிடைத்தது. ஆனால் சில மாதங்களிலே அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் அந்த காலக்கட்டத்திலேயே லாலு உலக நாடுகளில் புகழடைந்தார். ஏன் நமது இந்தியாவில் கூட பல மொழிகளில் இவரின் கதையும், கதாபாத்திரமும் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக இவரது ஊழல் குறித்தும் பல படங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. என்ன குற்றச்சாட்டுகள் இருந்தாலும், யார் என்ன சொன்னாலும் லாலுவை எப்போது பீகார் மக்கள் ஒதுக்கியதே இல்லை. அவர்களுள் ஒருவராக லாலு எப்போதுமே பார்க்கப்படுகிறார் என்பது தான் உண்மை.

தற்போது மாட்டுத்தீவன வழக்கில் அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5 லட்சமும் அபராதம் கிடைத்திருந்தாலும், அவருக்காக போராட அவரின் தொண்டர்கள் இருக்கிறார்கள், தொண்டர்களைப் போல பெரிய குடும்பமும் உள்ளது. இதையெல்லாம் விட அவர் எப்போது வெளியே வந்தாலும் அவரை மீண்டும் முதல்வராக ஒருவேளை பீகார் மக்கள் தயாராகவும் இருக்கலாம். சோ லாலு இஸ் ஆல்வேஸ் ஹேப்பி. ஆனால் வயது தான் ஒத்துழைக்க மறுக்கிறது. நீதிபதியிடம் சிறையில் குளிர் தாங்க முடியவில்லை என்று லாலு சமீபத்தில் வேதனையுடன் கூறியிருந்தார்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!