மத்திய மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

avatar

சென்னை: கன்னியாகுமரி மீனவர்களை மீட்பதில் தாமதம் தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் மீனவர்களை ஒன்று திரட்டி போராடுவோம் என மத்திய மாநில அரசுகளுக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கன்னியாகுமரி மீனவர்களை மீட்க வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டம் கடந்த 14 நாட்களாக பல கொடுமைகளுக்கு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், ஓகி புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் அந்த மாவட்டத்தைச் சார்ந்திருக்கும் மக்களை குறிப்பாக மீனவர்களை காப்பாற்றிட வேண்டுமென்று குரல் கொடுப்பதற்காக, அதை மத்திய மாநில அரசுகளுக்கு சுட்டிக் காட்டுவதற்காக அல்லது தங்களின் கடமைகளில் இருந்து தவறி இருக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில், இந்த ஆர்ப்பாட்டம் மீனவரணி சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நீங்களும், ஏதோ கன்னியாகுமரியில் தான் நடந்து கொண்டிருக்கிறது, அந்த மாவட்டத்திற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று இருந்துவிடாமல், எந்த மாவட்டமாக இருந்தாலும் நம்முடைய மக்கள் நம்முடைய மீனவர்கள் என்கிற உணர்வோடு, நம்முடைய உடன்பிறவா சகோதர, சகோதரிகளாக இருக்கக் கூடியவர்களுக்கு நாம் இந்த சென்னை மாநகரில் நின்றுகொண்டு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஓகி புயலைப் பொறுத்த வரையில், அந்த மாவட்டத்தைச் சார்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். காணாமல் போயிருக்கும் மீனவர்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள், இன்னும் எத்தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்கிற அந்த கணக்கை கூட எடுக்க முடியாத நிலையில் ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு மோசமான அரசாங்கத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலத்திலே பார்க்க முடியாது என்கிற அளவில் ஒரு குதிரைபேர ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொடூர தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஹிட்லரின் இதயம் கூட சில நேரங்களில் கசியும், ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் இந்த குதிரைபேர ஆட்சி இதயமில்லாத ஒரு ஆட்சியாக இருந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது. பேரிடரை சமாளிக்க முடியாத ஒரு அரசு, அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் எப்போது அதிமுக ஆட்சி வந்ததோ, அப்போதெல்லாம், ஒரு மிகப்பெரிய ஒரு பேரழிவு தமிழகத்தை தொடர்ந்து தாக்கிக் கொண்டு வருகிறது.

EyesTube | SPONSORED CONTENTS
avatar
உதாரணமாக சொல்ல வேண்டுமென சொன்னால், சுனாமி தாக்கிய நேரத்தில் கடலோர மாவட்டங்களில் எல்லாம், அந்த மாவட்ட மக்களெல்லாம் குறிப்பாக மீனவர்கள் எந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டார்கள், அதேபோல் தானே புயல் வந்த நேரத்தில் கடலூர் மாவட்டமே புரட்டி போடப்பட்டது. அப்படிப்பட்ட கொடுமையை அந்த மாவட்டத்தின் மக்கள் சந்தித்தார்கள். அதேபோல் டிசம்பர் 2015 ஆம் ஆண்டு சென்னையிலே ஒரு மிகப்பெரிய வெள்ளம், அதிலும் குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து திறக்காத காரணத்தால் சென்னை மட்டுமல்ல, சென்னையை ஒட்டி இருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டத்தின் மக்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டார்கள் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. அதேபோல வர்தா புயலில் நம் தமிழ்நாட்டு மக்கள் சிக்கித்தவித்தார்கள். அதையெல்லாம் தொடர்ந்து இப்போது ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த ஓகி புயல் என்பது கடந்த 29 ஆம் தேதி தாக்கியிருக்கிறது. அப்படி தாக்கப்பட்டதற்கு பிறகு 14 நாட்கள் இன்றோடு முடிவடைந்து இருக்கும் இந்தச் சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலையில் நான் நேரடியாக அந்த மாவட்டத்திற்குச் சென்று அந்த மாவட்டத்தைச் சார்ந்திருக்கும் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஏறக்குறைய 35 கிராமங்களுக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு ஆறுதலை சொன்னோம். ஆறுதலை சொன்னதோடு மட்டுமல்ல, தேவைப்படக்கூடிய இடங்களில் அவர்களுக்கு தேவையான சில உதவிகளையும் சில பொருட்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாம் வழங்கி இருக்கின்றோம்.

அதற்குப் பின்னால், மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க வேண்டுமென நானே நேரம் கேட்டேன். அப்போது என்னோடு இருந்த நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் என்னிடத்தில் என்ன சொன்னார்கள் எனக்கேட்டால், நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர், நீங்கள் போய் ஆட்சித் தலைவரை சந்திக்க வேண்டிய அவசியமில்லை. அவர்தான் வந்து உங்களைச் சந்திக்க வேண்டும், எனவே நாமிருக்கும் இடத்தில் அவரை வரச் சொல்லுவோம், என்றுகூட என்னிடத்தில் சொன்னார்கள். நான் அப்போது சொன்னேன், இது எதுவோ நம்முடைய தனிப்பட்ட பிரச்சினை அல்ல, மக்கள் பிரச்சினை எந்த மரியாதையும் நாம் பார்க்காமல், எந்த ப்ரெஸ்டிஜும் பார்க்காமல் நாமே நேரடியாக செல்வோம் எனச் சொல்லி, ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்றோம். ஆட்சித் தலைவரை சந்தித்தோம், எங்களிடம் வழங்கப்பட்டு இருக்கின்ற மனுக்களை எல்லாம் அவரிடத்தில் ஒப்படைத்தோம். அதற்குப்பிறகு சில செய்திகளை எடுத்துச் சொல்லி, நிவாரணப் பணிகளில் முழு வீச்சோடு அரசு ஈடுபட வேண்டும் அதற்கு ஆவன செய்யுங்கள் என அவரிடத்திலே குறிப்பிட்டு சொல்லிவிட்டு வெளியில் வந்தோம்.

EyesTube | SPONSORED CONTENTS
avatar
நாங்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கும் எதிர்க்கட்சியை சார்ந்திருக்கும் அனைவருமே சென்றிருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, சில பொதுநல அமைப்புகளைச் சார்ந்திருப்பவர்களும் சென்றிருக்கிறார்கள். இவ்வளவு பேர் சென்ற பிறகும் கூட, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சென்றாரா? என்றால் இல்லை. இதே வடசென்னை பகுதியில் நம்முடைய இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னேன். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் அருகிலே ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது, அதைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் அவர்களிடத்தில் நாங்கள் நேரம் கேட்டிருக்கின்றோம். அவர் நேரம் தருகிறபோது, இந்தப் பிரச்சினையை எடுத்து வைக்க இருக்கிறோம். அதற்குப்பிறகும் மத்திய மாநில அரசு முழுமையாக ஈடுபடவில்லை எனச் சொன்னால், தேவைப்பட்டால் டெல்லிக்கு சென்று சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் சந்தித்து இதுகுறித்து பேசிட போகிறோம் என மேடையிலே குறிப்பிட்டுச் சொன்னேன்.

இப்போது நமக்கு செய்தி வந்திருக்கிறது, ஆளுநர் எங்களைச் சந்திக்க நேரம் தந்திருக்கிறார், அதை பயன்படுத்திக் கொண்டு பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல இருக்கிறோம். இன்னொரு செய்தியும் காலையில் வந்தது, அது என்னவென்று கேட்டால் ஏதோ திடீர் ஞானோதயம் வந்தது போல, குதிரைபேர ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றிருப்பதாக செய்திகள் வந்திருக்கிறது. உள்ளபடியே வரவேற்கிறோம். ஆனால் இந்த புத்தி இந்த அறிவு சம்பவம் நடந்த அடுத்த நாளே வந்திருக்க வேண்டுமா? வேண்டாமா?

ஆக, முதலமைச்சரை இன்றைக்கு இயக்கி கொண்டிருப்பதே நாம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இவ்வளவு நாட்கள் கழித்து புத்தி வந்ததற்காக நாம் பெருமைப்படலாம். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றவர், பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களை சந்திக்கிறாரா? இந்த மேடைக்கு வந்த பிறகு எனக்கு செய்தி வந்திருக்கிறது, அவர் போனார், தூத்துக்குடி விமான நிலையத்தில் போய் இறங்கி, அங்கே காரிலே புறப்பட்டு போயிருக்கிறார். அப்போது மாவட்டத்தில் இருக்கக்கூடிய முக்கிய கடைகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்து அடைக்கப்பட்டு இருந்திருக்கிறது. சாவுக்கு வரவில்லை, காரியத்திற்கு வருகிறாரா முதலமைச்சர் என்கிற கோஷங்கள் அங்கே எழுப்பப்படுகிறது.

EyesTube | SPONSORED CONTENTS
avatar
அந்த கோஷங்கள், அங்கே பேனர்களாக வைக்கப்பட்டு இருக்கிறது. ஆக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் செல்லவில்லை, ஒரு நாடகத்தை நடத்துவதற்காக, இங்கே எல்லோரும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே என்பதற்காக நம்மை ஏமாற்றுவதற்காக அவர் அங்கே சென்றிருக்கிறார். அதற்குப் பின்னால் இன்னொரு செய்தி என்னவென்றால், அதிமுக வைச் சேர்ந்தவர்களை மட்டும் பார்த்து முக்கிய நிர்வாகிகள் என மண்டபத்திற்கு வரவழைத்து உட்கார வைத்து பேசிவிட்டு, ஆட்சித் தலைவரை அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வைத்து விட்டு திரும்ப போகிறார் என்கிற செய்தி தான் வந்திருக்கிறது. ஒரு நல்ல எண்ணத்தோடு அவர் போயிருந்தால், மக்கள் என்ன எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் வந்தாலும், அதையும் எதிர்க்கும் அந்த தெம்பு, திராணி, தைரியம் இன்றைக்கு முதலமைச்சருக்கு இல்லை. அதனால் தான் அவர் அங்கு போகப் பயப்படுகிறார்.

அவர்கள் சொல்லலாம், ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைச்சரை அனுப்பி வைத்து இருக்கிறோம், துணை முதலமைச்சரே சென்றார், நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஸ்பெஷலாக நியமிக்கப்பட்டு அங்கேயே சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என சொல்லலாம். நான் மறுக்கவில்லை. ஆனால், சென்றவர்களும் தைரியமாக தெம்பாக திராணியோடு பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லும் வக்கு, வகை, தெம்பு யாருக்கும் இல்லை. ஏனென்றால், செல்லுகிற போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத வகையில், இந்த மீனவ சமுதாயத்திற்கு ஆறு ஆண்டு காலமாக அதிமுக ஆட்சியில் எந்த நன்மைகளும், திட்டங்களும் சாதனைகளும், ஏற்படவில்லை. அந்த எண்ணத்தோடுதான், அவர்கள் அதை தவிர்த்து இருக்கிறார்களே தவிர வேறல்ல.

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்பதற்காக தான் கருணாநிதி முதலமைச்சராக இருந்த நேரத்தில் கம்பியில்லா தொலைத் தொடர்பு சாதனம் ( வாக்கி டாக்கி) வழங்க உத்தரவிட்டார். 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டது மட்டுமல்ல, எல்காட் நிறுவனம் மூலமாக அதை நிறைவேற்றுவதற்கு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஆணையிட்டு இருக்கிறார். அதற்குப் பிறகு முதற்கட்டமாக 7 கோடியே 73 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் வாக்கி டாக்கி வாங்கப்பட்டு 2010 இல் வழங்கப்பட்டு இருக்கிறது.

வாக்கி டாக்கிக்காக கடலோர மாவட்டங்களில் தொலைத் தொடர்பு கோபுரங்கள் அமைக்க பி.எஸ்.என்.எல் கோபுரங்களை குத்தகைக்கு எடுத்துக் கொள்ளவும், முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தான், சட்டமன்ற தேர்தல் வந்தது. அதில் தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது, அதற்குப் பிறகு அந்தப் பணியை அவர்கள் தொடர்ந்து நிறைவேற்றி இருப்பார்கள் எனச் சொன்னால், நிச்சயமாக, இந்த ஓகி புயலால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயிருக்க மாட்டார்கள், நூற்றுக்கணக்கானவர்கள் உயிரை இழந்திருக்கும் சூழல் வந்திருக்காது. ஆனால் இந்த குதிரைபேர ஆட்சி அதைப்பற்றி எல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.

EyesTube | SPONSORED CONTENTS
avatar
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், கொள்கை விளக்க குறிப்பில் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டி இருக்கிறார்கள். விரைவில் இந்த திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்கிற உறுதியை தந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு இம்மியளவு கூட எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. அதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்து இருக்கிறது, பேரம் பேசப்பட்டு இருக்கிறது. இவர்கள் கொள்ளையடிப்பதற்காக கன்னியாகுமரியில் நமது ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயிருக்கின்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது என்றால், இந்த ஆட்சியை இன்னமும் விட்டுவைக்கலாமா என்ற கேள்விதான் நமக்கெல்லாம் எழுந்திருக்கிறது. ஆகவே, பக்கத்தில் இருக்கும் கேரள மாநிலத்தினர் எந்தளவுக்கு தங்களுடைய பணிகளை கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர்.அந்த மாநிலத்தின் முதலமைச்சர் உடனடியாக ஓடோடி வருகிறார், பாதிக்கப்பட்ட மக்களை போய் சந்திக்கிறார், ஆறுதல் சொல்கிறார், நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். அதுமட்டுமல்ல, அந்த மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் எத்தனை பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்று கணக்கு சொல்கிறார்கள்.

எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள், எத்தனை வீடுகள் சின்னாபின்னமாகியிருக்கிறது என்று முறையாக கணக்கெடுத்து, உரிய வகையில் தேவையா நிதியை அறிவித்து, தங்கள் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கு என்ன நிலை? இந்த புயல் அடித்த மறுநாள் தலைமைச் செயலாளர் சொன்ன கணக்கு, 197 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். அதே செய்தியை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வேறு மாதிரி சொல்கிறார். இரண்டு நாட்களுக்கு பிறகு முதலமைச்சர் ஒரு ஆய்வுக் கூட்டத்தை சென்னையில் நடத்தி, ஏறக்குறைய 500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கிறார்கள், அதில் 200க்கும் மேற்பட்டோர் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். மீதம் இருப்பவர்களை காப்பாற்ற முயற்சிகள் எடுத்து வருவதாக தவறான தகவல் பரப்புகிறார்கள்.

மத்திய,மாநில அரசுகளை இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக வலியுறுத்தி வற்புறுத்திக் கேட்டுக் கொள்ள விரும்புவது, உடனடியாக நடவடிக்கையில் ஈடுபடுங்கள், அந்த மீனவர்களை காப்பாற்றுங்கள், அங்கே கதறிக் கொண்டிருக்கும் தாய்மார்களின் கண்ணீரை துடைக்கின்ற முயற்சிகளில் ஈடுபடுங்கள். கேரள மாநிலத்திலே இருக்கின்ற அரசு எந்தெந்த நிலைகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறதோ அதில் முழுமையாக கூட வேண்டாம், ஒரு 25 சதவீதம் அந்தப் பணிகளில் ஈடுபடுங்கள் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக கேட்டுக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். இனியும் நீங்கள் அதிலிருந்து தவறினால், இன்னமும் நீங்கள் தாமதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால், நாளைய தினம் ஆளுநரை சந்திக்கிறோம், அதற்குப்பிறகு தேவைப்படுமானால் டெல்லிக்கு சென்று வலியுறுத்தும் திட்டங்களையும் வைத்திருக்கிறோம். அதற்குப் பிறகும் செவிடாக இருந்தால் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மீனவ நண்பர்களையும் ஒன்று திரட்டி ஒரு மிகப்பெரிய போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னின்று நடத்தும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

EyesTube | SPONSORED CONTENTS

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!