சங்கர் ஆணவ கொலை வழக்கு தண்டனை முழு விவரம்!

avatar

திருப்பூர்: காதல் திருமணம் செய்த, தலித் இளைஞர் சங்கர் படுகொலை வழக்கில் இன்று திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றம் சாட்டப்பட்ட கவுசல்யா தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. நாட்டையே உலுக்கிய சங்கர் ஆணவ கொலை வழக்கில், இன்று திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பு வழங்கினார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த கவுசல்யா தாய் அன்னலட்சுமி, 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தாய் மாமா பாண்டித்துரை, 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரசன்னா ஆகிய மூவரை வழக்கிலிருந்து நீதிபதி விடுதலை செய்தார். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமக்கு குறைந்த தண்டணை வழங்க வேண்டும் என சின்னசாமி தரப்பில் வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து, "எதன் அடிப்படையில் குறைந்த தண்டனை கேட்கின்றீர்கள். நீங்கள் மிகவும் பெரிய குற்றத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்" என நீதிபதி அலமேலு நடராஜன் பதிலுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து மதியம் சுமார் 1.40 மணியளவில் நீதிபதி தீர்ப்பை வாசிக்க தொடங்கினார்.

முதல் குற்றவாளி சின்னசாமிக்கு தூக்கு தண்டனை விதித்தார் நீதிபதி. அதேபோல சங்கரை துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல்ராஜ் ஆகிய 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

9வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்ததாக கைது செய்யப்பட்ட, 11வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். சிறப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, இதற்கு காவல்துறை கடும் முயற்சி எடுத்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

அரசு தரப்பிலோ, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டது. வருங்காலத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்வோர் பாதுகாப்பாக உணரும் வகையில் இந்த தீர்ப்பு இருக்க வேண்டும் என்பதால், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்பது அரசு தரப்பு வழக்கறிஞர் வாதமாகும்.

முன்னதாக, காலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த, நீதிபதி, பிற்பகல் 12.50 மணிக்கு தண்டனை விவரத்தை அறிவிப்பதாக தெரிவித்தார். இதன்படி, பகல் 1.40 மணியளவில் தீர்ப்பு வெளியானது. இதையடுத்து தீர்ப்பை எதிர்நோக்கி அனைத்து தரப்பும் நீதிமன்றத்திலேயே அமர்ந்திருந்தனர். இதனிடையே, தண்டனை விவரம் வெளியான பிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன் என நிருபர்களின் கேள்விகளுக்கு காலையில் கவுசல்யா பதிலளித்துவிட்டு மீண்டும் நீதிமன்றத்திற்குள் சென்றுவிட்டார். தண்டனை விவரம் அறிவித்த பிறகு அவர் இதுவரை கருத்து எதுவும் கூறவில்லை.

தீர்ப்பு வெளியானதையடுத்து நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!